'உடம்பை வளர்த்தேன்; உயிர் வளர்த்தேனே' என்றார் திருமந்திரம் தந்த திருமூலர். உடல் வளர உள்ளமும் வளரும். இந்த உண்மையை நாம் நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும். ஆரோக்கியமான மனம் ஓர் ஆரோக்கியமான உடலிற்றான் இருக்கும் என்பர். உடலினை உறுதிசெய் என்றார் பாரதியார். இவையெல்லாம் உடலை நன்கு பேணுவதன் அவசியத்தையே வலியுறுத்துகின்றன. இவற்றைக் கருத்திற்கொண்டே யானும் உடல்நலம் பேணும் மருத்துவத்துறையைத் தேர்ந்தெடுத்து உயர் கல்வி பெற்று மருத்துவராக வர விரும்புகின்றேன். நான் மருத்துவரானால் என் பணி எத்தகையதாயிருக்கும் என்பதை எடுத்துரைக்க விரும்புகின்றேன்.
இன்று அறிவியல் பெரிதும் முன்னேறியுள்ளது. தினந்தினம் மருத்துவத்துறையில் புதிய புதிய கண்டுபிடிப்புக்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. அதற்கேற்பத் தரமான சிகிச்சை அளிக்க நான் முற்படுவேன்.'நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்பச் செயல்' என்றார் வள்ளுவர். இது பொதுவாக மருத்துவமுறை எனினும் எனது அறிவைப் பயன்படுத்திச் சிறப்புச் சிகிச்சைக்கு ஆவன செய்வேன். என்னை நாடி வரும் நோயாளர் நலம் பெற எனது திறமை முழுவதையும் யான் பயன்படுத்திச் சிகிச்சை வழங்குவேன்.
மருத்துவத்துறை ஏனைய துறைகளைப் போன்றதல்ல.இது உயிர்காக்கும் தொழில் சார்ந்தது. இன்று இது பயன் கருதிச் செய்யும் வியாபாரம் போன்று மாறி வருகின்றது.இதனால் ஏழை எளிய மக்கள் சொல்லொணாக்கஷ்டமுறுகின்றனர். இந்நிலை மாற வேண்டும். பயன் கருதாத் தொண்டாக, இறைவனுக்குச் செய்யும் பணியாக இதனைக் கருத வேண்டும். நான் மருத்துவரானால் வருமானம் பெருக்கிக்கொள்ளும் ஒரு தொழிலாக இதனைக்கருதாது இறைவனுக்குச் செய்யும் ஒரு பணியாக இதனைக் கருதிச்செயற்படுவேன்.'என் கடன் பணி செய்து கிடப்பதே' என்ற அப்பர் சுவாமிகளின் வாக்கைக் கடைப்பிடித் தொழுகுவேன். ஏழை எளிய மக்களுக்கு இலவசசிகிச்சை அளிப்பேன். வசதி படைத்தோரிடம் ஒரு குறிப்பிட்டளவு கட்டணமே அறவிடுவேன்
சமுதாயத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ள மக்கள் பலர் சுகாதார நெறிமுறைகளை அறியாதவர்களாக அல்லற்படுகின்றனர். அத்தகையோர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சுகாதாரக்கருத்தரங்குகள் நடத்த முற்படுவேன். பல்வேறு சமுக நிறுவனங்களோடும்தொடர்பு கொண்டு நடமாடும் இலவச சிகிச்சை முகாம்களை நடத்த ஏற்பாடு செய்வேன். சமுதாயப்பணியாகக் கருதி இதனைச் செயற்படுத்த முற்படுவேன். மகளிருக்கும் குழந்தைகளுக்கும் முதியோருக்கும் தேவைப்படும் சிகிச்சை வசதிகளை மட்டுமன்றி ஊட்டச்சத்து மாத்திரைகள், மருந்துவகைகள் போன்றவற்றைப் பெற்றுத் தரவும் முற்படுவேன், நாளைய பிரசைகளாக நாட்டின்தலைவர்களாக உருவாகப் போகும் இன்றைய சிறார்கள் உடல் நலமும் உள நலமும் கொண்டவர்களாக விளங்குதற்கு என்னாலான உதவிகளையும் வழங்குவேன்.
'உடம்பாரழியில் உயிரார் அழிவர்' என்பது திருமூலர் தம் வாக்கு.எனவே உடல் நலமே எல்லாவற்றிலும் மிகச் சிறந்த செல்வமாகும். மக்கள் நோயற்றவர்களாக, உடல் நலமும் உளநலமும் வாய்க்கப் பெற்றவர்களாக வாழ்ந்திட, வளர்ந்திட உழைப்பது நம் அனைவரதும்கடமையாகும். இக்கடமையைச் செவ்வனே செய்திட, சமுதாயத்தில் விழிப்புணர்வு உருப்பெற யான் தொடர்ந்து பணியாற்றுவேன். என்னைப் போல ஏனைய துறைகளில் ஈடுபட்டுள்ளோரும் அவரவர் துறை சார்ந்த தொழில்களில் சேவை மனப்பான்மையுடன் செயற்படுவார்களாயின் வீடும் நாடும் நலம் பெறும் என்பது திண்ணம். நாடு நலம் பெற்றாலே வீடும் நலம் பெறும் என்பதை நாமுணர்தல் வேண்டும். ‘நாட்டுக்குழைப்போம்! நல்லன செய்வோம்!!' என்ற குறிக்கோளுடன் யான் மருத்துவத்துறையில் மகத்தான பணிகளை ஆற்றிட உறுதி பூண்டுள்ளேன் என்பதை உங்களுக்குக் கூறி வைக்க விரும்புகின்றேன்.
கருத்துரையிடுக