இன்று மக்களால் பெரிதும் விரும்பிப் படிக்கப்படும் இலக்கிய வகையாகச் சிறுகதை விளங்குகிறது. இத்துறை காலந்தோறும் பல்வேறு அரசியல் பொருளாதாரச் சூழல்களினால் பாதிக்கப்பட்டுச் செம்மையும் பொலிவும் பெற்று வளர்ந்துள்ளது. ஈழத்தில் சிறுகதை இலக்கியம் இன்று தனிச் சிறப்புப் பெற்று மிளிர்கின்றது. சிறுகதைத் தொகுதிகள் நாளுக்கு நாள் வெளிவந்த வண்ணமுள்ளன. வார இதழ்களும், சிற்றிதழ்களும் சிறுகதைகளை விருப்பிப் பிரசுரிக்கின்றன. இந்நிலையில் ஈழத்துச் சிறுகதை வளர்ச்சியினைச் சிறிது நோக்குவோம்.
1930ஆம் ஆண்டளவில் ஈழத்திலும் சிறுகதை இலக்கியம் தோன்றுவதற்கான சூழ்நிலை உருவாயிற்று. மேலை நாட்டு இலக்கியங்களின் தொடர்பு, தமிழ்நாட்டு எழுத்தாளர்களின் படைப்புக்களின் தாக்கம் இத்தகைய சூழ்நிலையினை உருவாக்கியது. ஈழத்துச் சிறுகதை இலக்கிய முன்னோடிகள் மூலவர்களெனப் போற்றப்படும் சி.வைத்திலிங்கம். இலங்கையர்கோன், சம்பந்தன் ஆகியோரின் கதைகள்,‘கலைமகள்', 'கிராம ஊழியன்' பத்திரிகைகளில் வெளியாயின. இவர்களது கதைகளில் தமிழ்நாட்டு எழுத்தாளர்களான கு.ப.ரா. பிச்சமூர்த்தி, சிதம்பர சுப்பிரமணியன், மௌனி ஆகியோரின் நேரடித்தாக்கமும், மேலைநாட்டுச் சிறுகதைகளின் பாதிப்பும் காணப்பட்டது.எனினும் ஈழத்து மண்வாசனையும், கிராமிய மக்களின் வாழ்க்கைச்சித்திரிப்பும் பெருமளவு பிரதிபலித்தது.
1940 - 1950 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் ஈழத்தில் சிறுகதை எழுத்தாளர்கள் பலர் உருவாகினர். இலக்கியம் சமூகத்தைச் சீர்திருத்தவும்,புதியதோர் சமூகத்தை உருவாக்கவும் பயன்பட வேண்டும் என்ற இலட்சிய வேட்கையுடன் இவர்கள் தமது படைப்புக்களை வெளியிட்டனர். பிரதேச மண்வாசனையுடன் கூடிய சிறுகதைகள் பல உருவாகின. இக்காலகட்டத்தில் ஈழகேசரியின் பங்களிப்பும் சிறுகதை வளர்ச்சிக்கு உதவியது. அ. செ. முருகானந்தன், அ. ந. கந்தசாமி, வ. அ. இராசரத்தினம், வரதர் (தி.ச. வரதராசன்), கனக செந்திநாதன், சொக்கன், சு. வேலுப்பிள்ளை (சு.வே) க. சிவகுருநாதன், சு. நல்லையா, தாழையடி சபாரத்தினம், சு.இராஜநாயகம் போன்றோர் இக்காலகட்டத்தில் குறிப்பிடத்தக்க சிறுகதை எழுத்தாளர்களாவர். தமிழகத்தில் 'மணிக்கொடி' க்காலம் போன்று ஈழத்தில் இக்காலத்தை ‘மறுமலர்ச்சி' க் காலம் எனவும் கூறுவர். 1945ஆம் ஆண்டில் ஆரம்பமான 'மறுமலர்ச்சி' புதிய பல எழுத்தாளர்களை மட்டுமன்றிப் புதிய பல கருத்துக்களையும் அறிமுகப்படுத்தியது.
'இவர்களது சிறுகதைகளில் யாழ்ப்பாணம் வெறும் களமாக மாத்திரம் அமையவில்லை. யாழ்ப்பாணத்து வாழ்க்கைப் பிரச்சினைகளே இவர்களது சிறுகதைகளுக்குப் பொருளாயின்' எனப் பேராசிரியர் கா. சிவத்தம்பி குறிப்பிட்டுள்ளமை இங்கு கருத்தில் கொள்ளத்தக்கது. ஈழத்தில் 1956இல் ஏற்பட்ட அரசியல் மாற்றம் தமிழ் இலக்கியத்துறையில் பாரிய மாற்றத்தை உருவாக்கியது. 1956 - 1960 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டம் ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை வளர்ச்சியில் முக்கியமானதோர் திருப்புமுனையாக அமைந்தது. இக்காலகட்டத்தில் 'வீரகேசரி', 'தினகரன்', 'சுதந்திரன்', 'தேசாபிமானி' போன்ற பத்திரிகைகள் ஈழத்துச் சிறுகதை வளர்ச்சிக்கு ஊக்கமளித்தன.'சுதந்திரன்' புதிய எழுத்தாளர் பலரை அறிமுகப் படுத்தியது. சிறுகதையின் உருவ, உள்ளடக்க அடிப்படையில் விரிவான சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சமூக, பொருளாதார அடிப்படையிலான முரண்பாடுகளின் விளைவுகளைச் சித்திரிக்கும் வகையில் சிறுகதைகள் பல வெளியாயின. இக்காலப்பகுதியின் சிறுகதைகள் உருவம், உள்ளடக்கம் ஆகிய வற்றில்
ஒப்பீட்டளவில் முன்னைய பரம்பரையிலிருந்து வேறுபட்டிருந்தன.
பல வெளியாகின. மு. தளையசிங்கம், செ. கதிர்காமநாதன், செ.யோகநாதன், நந்தி, யோ. பெனடிக்பாலன், செம்பியன் செல்வன், செங்கையாழியான், கே.வி. நடராசன், தெணியான், க. நெல்லை க. பேரன், குந்தவை, பவானி, தெளிவத்தை ஜோசப், சிற்பி, மாத்தளை வடிவேலன், மலரன்பன், பூரணி, மலைச்செல்வன், சாரல்நாடன்,மாத்தளை சோமு, திருச்செந்தூரன், நூரளை சண்முகநாதன், உதயணன் போன்றோர் சிறந்த பல சிறுகதைகளைப் படைத்தனர். மலையகத்தொழிலாளர்களின் துயரம் தோய்ந்த வாழ்க்கையினைச் சித்திரிக்கும் சிறுகதைகள் பலவற்றை மலையக எழுத்தாளர்கள் எழுதினர். 1970 காலப் பகுதிகளில் சிறுகதை எழுதத் தொடங்கியவர்களுள் திக்குவெல்லை கமால், லெ. முருகபூபதி, பொ. பத்மநாதன், எஸ்.எம். இக்பால், காவலூர் ஜெகநாதன், ப. ஆப்டீன், அ. பாலமனோகரன், அ.ஸ. அப்துல்ஸமது, சுதாராஜ், அன்ரனி ஜீவா, மு. கனகராசன், குப்பிளான் ஐ. சண்முகன், துரை சுப்பிரமணியன், மு. பொன்னம்பலம், ரஞ்சகுமார் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாவர்.
எழுபதுகளின் பின் இன்றுவரை பல்வேறு சிறுகதை எழுத்தாளர்கள் ஈழத்தில் உருவாகியுள்ளனர். இவர்களின் படைப்புக்களின் கருப்பொருள்கள் மிக விரிவும், கூர்மையும் அடைந்துள்ளன. கிராமிய வாழ்க்கை நகர்ப்புற வாழ்க்கை இரண்டுக்குமிடையிலான முரண்பாடுகள், மனித வாழ்வின் அவலங்கள், மற்றும் கண்ணில்படுகின்ற மனத்தில் தைக்கின்ற அனைத்தும் சிறுகதைகளில் பிரதிபலிக்கின்றன. விமர்சிக்கப்படுகின்றன. தேசிய இனப்பிரச்சினை முனைப்புக்கொண்ட காலமிதுவாகும். எண்பதுகளின் பின் படைக்கப்படும் சிறுகதைகளில் இன தொடர்பான நிகழ்வுகளும் முக்கிய இடம்பெற்று வருவதைக் முடிகின்றது.
இடப்பெயர்வு, அகதி வாழ்க்கை பெண்ணிலைவாதச் சிந்தனைகள், விடுதலை வேட்கை போன்றவற்றை மையமாகக் கொண்ட அநேகம் சிறுகதைகள் இக்காலகட்டத்தில் வெளியாகியுள்ளன. முன்னர் எக்காலத்தையும் விட 1980 இன் பின் சிறுகதைத் தொகுதிகள் பல வெளிவந்து ள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இக்காலப்பகுதியில் உருவான எழுத்தாளர்களில் திருமதி கோகிலா மகேந்திரன், இணுவை சிதம்பர திருச்செந்திநாதன், சோ. ராமேஸ்வரன், சட்டநாதன், மு. சிவலிங்கம், தாமரைச்செல்வி, கே. ஆர். டேவிட், உமா வரதராசன், சாந்தன், ராஜஸ்ரீகாந்தன், அ. யேசுராசா, என். கே. மகாலிங்கம், மு. புஸ்பராசன், நந்தினி சேவியர், அ. ரவி, க. தணிகாசலம், நா. தர்மலிங்கம், ச.முருகானந்தன் போன்றோர் குறிப்பிடத்தக்கோராவர். இன்று இவர்களில் சிலர் புகழ்மிக்க பல படைப்புக்களைத் தந்துள்ளனர். புலம் பெயர்ந்து வாழும் ஈழத்து எழுத்தாளர்களது சிறுகதைகள், புலம் பெயர்ந்து அகதிகளாக வாழும் மக்கள் அனுபவிக்கும் இன்னல்களை, அவர்களது வாழ்க்கைப் பிரச்சினைகளை நன்கு சித்திரிக்கின்றன.
இருபதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் பல்வேறு சிறுகதைத்தொகுப்பு நூல்களும் வெளியாகியுள்ளன. 'மறுமலர்ச்சி' சிறுகதைகளின் தொகுப்பு, ‘ஈழகேசரி' சிறுகதைகளின் தொகுப்பு என்பன குறிப்பிடத்தக்கன.சுருங்கக்கூறின் தமிழ் நாட்டுச் சிறுகதை எழுத்தாளர்களை விட ஈழத்துச் சிறுகதை எழுத்தாளர்களின் படைப்புக்களில் சமுதாயப் பார்வை கூர்மை பெற்று விளங்குகின்றது எனலாம். இத்தகைய ஆரோக்கியமான சூழ்நிலையில் ஈழத்துச் சிறுகதை வளர்ச்சி பெருமைப்படத்தக்க வகையில் அமைந்துள்ளது.
கருத்துரையிடுக