‘இந்து சமுத்திரத்தின் நித்திலம்' எனப் போற்றப்படும் ஈழநாட்டின் இதயம் போன்று மிளர்வது கொழும்பு மாநகரம். உல்லாசப் பயணிகளின் சொர்க்கபுரியாக விளங்கும். கொழும்பு மாநகரின் மேற்குப் புறத்தே அமைந்துள்ளது காலிமுகத்திடல். அதன் கரையில் உலா வருவதில் எனக்குத்தீராத ஆசை. நீண்ட நாட்களுக்குப் பின் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை காலிமுகத்திடலுக்குச் சென்றிருந்தேன். பழைய பாராளுமன்றக் கட்டடத்தின் எதிர்ப்புறத்தே கடற்கரையோரமாக அமைந்திருந்த படிக்கட்டொன்றில் அமர்ந்தேன். வானம் மப்பும் மந்தாரமுமற்றுத் தெளிவாக இருந்தது. தென்றல் காற்று என் மேனிதழுவி இன்பமூட்டியது. எதிரே இந்துமாக்கடல் இரைந்து கொண்டிருந்தது. அக்கருநீலக் கடல் என்னை வா வா என்று அழைப்பது போல அலை எழுப்பி அரவணைத்து அழைப்பு விடுத்துக்கொண்டிருந்தது.
எல்லையற்று விரிந்து பரந்த அக்கடலைப் பார்த்தபோது என்னுள்ளமும் விரிவடைந்தது. கடலோரமாகச் சென்று நின்று கொண்டேன். கடலையும் வானையும் ஒரு சேர நோக்கினேன். ஆகா! என்ன அழகு. அவை ஒன்றோடொன்று கட்டித் தழுவி விளையாடுவதுபோன்றிருந்தது. வரிசை வரிசைகளாக வரும் அலைகள் மேலெழுந்தும் உருண்டும் புரண்டும் வெண்மையான நுரைகளைக் கக்கியவண்ணம் கரையை வந்து முத்தமிட்டுச் சென்றன. அவை உயர்ந்தும் தாழ்ந்தும் எழுந்து வரும் காட்சி வெண்மை நிறம் கொண்ட மலைகள் அசைந்து வருவன போலவே தோன்றின. கடலன்னையின் பட்டாடையில் பதித்த வெண்சரிகைக் கொடிகள் போல அவற்றின் நுரைகள் என் கண்களுக்குத் தோன்றின. வரிசை வரிசையாக மேலெழுந்தும் தாழ்ந்தும் வரும் அலைத்திரள்கள் குதிரைப்படையொன்று அணிவகுத்து வருவது போலவும் தோன்றின.
இந்த அரிய காட்சியில் என்னை மறந்து லயித்திருந்த என்னைக்கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களின் ஆரவாரம் திரும்பிப் பார்க்கச் செய்தது. சின்னஞ்சிறியவர்கள் வெகு ஆனந்தமாகக் கடற்கரை மணற்பரப்பில் ஓடி விளையாடிக் கொண்டிருந்தார்கள். சிலர் கடல் சென்று விடும் எட்டப்போகாதீர்கள் என்று அவர்களது பெற்றோர்கள் எச்சரித்த வண்ணமிருந்தனர். வேறு சிலர் தங்களை மறந்த நிலையில் கடலோரத்தில் கதைகள் பேசிக் களித்துக் கொண்டிருந்தனர். சிட்டுக்குருவிகள் அன்ன சின்னஞ் சிறுமிகள் வட்டமாக அமர்ந்து கடல் மணலில் சிற்றில் அமைத்து சமையல் செய்வதாகப் பாவனை செய்து கொண்டிருந்தனர்.
வேகமாக வந்த கடல் அலைகள் சில அவர்களது சிற்றில்களை அடித்துச் சென்றன. கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களின் ஆரவாரம் திரும்பிப் பார்க்கச் செய்தது. சின்னஞ்சிறியவர்கள் வெகு ஆனந்தமாக க்கடற்கரை மணற்பரப்பில் ஓடி விளையாடிக் கொண்டிருந்தார்கள். சிலர் கடல் சென்று விடும் எட்டப்போகாதீர்கள் என்று அவர்களது பெற்றோர்கள் எச்சரித்த வண்ணமிருந்தனர். வேறு சிலர் தங்களை மறந்த நிலையில் கடலோரத்தில் கதைகள் பேசிக் களித்துக் கொண்டிருந்தனர். சிட்டுக்குருவிகள் அன்ன சின்னஞ் சிறுமிகள் வட்டமாக அமர்ந்து கடல் மணலில் சிற்றில் அமைத்து சமையல் செய்வதாகப் பாவனை செய்து கொண்டிருந்தனர். வேகமாக வந்த கடல் அலைகள் சில அவர்களது சிற்றில்களை அடித்துச் சென்றன. சிறுகால் நண்டுகள் சில தங்கள் வளைகளை விட்டு வெளியேறி மணற்பரப்பில் ஊர்ந்து கொண்டிருந்தன. அவற்றின் எட்டுக் கால்களும் மணற்பரப்பில் பதிந்தன. அவை மணற்பரப்பில் பதித்த பூக்களைப் போல அழகொளிரக் காட்சி தந்தன. அவற்றையும் அலைக்கரங்கள் விட்டு வைக்கவில்லை. அள்ளிச் சென்றன. அவ்வேளையில் நம்நாட்டுக் கவிஞர் மஹாகவியின் அருமையான பாடல் ஒன்று என் நினைவுக்கு வந்தது.
'சிறுநண்டு மணல் மீது படமொன்று கீறும் சில்வேளை இதை வந்து கடல் கொண்டு போகும்' என்ற கவிஞரின் தத்ரூபமான சித்திரக் காட்சியினை நேரிற் கண்டு மகிழ்ந்தேன்.
கடலின் தொலைவில் பாரிய கப்பல்கள் புகை கக்கியபடி வேகமாகச் செல்வதைக் கண்டேன். அவை கொழும்புத்துறைமுகத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தன. அவை மட்டுமன்றிச் சிறு சிறு புள்ளிகள் போலப் படகுகள் சில தெரிந்தன. அவை நான் நின்று கொண்டிருந்த பகுதியை நோக்கிவந்து கொண்டிருந்தன. அவை மீனவர்களது படகுகள் என்பதைக் கிட்ட வந்தபோது தெரிந்து கொண்டேன். பகலில் மீன்படிப்பதற்காக ஆழ்கடலுக்குச் சென்ற மீனவர்கள் கரைநோக்கித் திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்களது சிறிய படகுகள் பாய் விரித்து கடல் அலைகளில் மிதந்து கொண்டிருந்தகாட்சியானது கடல் அன்னைக்கு வெண்சாமரம் வீசுவது போன்றிருந்தது.கடலின் அடிப்பரப்பில் அநந்த கோடி உயிரினங்கள் வாழ்கின்றன. அவை கடல் தரும் செல்வங்கள். அவற்றிற்கிடையேயும் போராட்டங்கள் நிகழத்தான் செய்கின்றன போலும். பெரியவை சிறியவைகளைத் தாக்கச் சிறியவை மேலெழுந்து மின்னல் போல் பாய்ந்து செல்கின்றன.
அவை மாலை வெயிலில் மின்னற் கீற்றுப் போலவும் தங்கக் கட்டிகள் போலவும் காட்சி தருகின்றன. இப்பொழுது சூரியன் மெல்ல மெல்ல தன் பொற்கிரணங்களை ஒடுக்குகிறான். செக்கச் சிவந்த அவன் தோற்றம் தங்கத் தாம்பாளம் போலவும் செம்பொற் குடம் போலவும் காட்சி தருகிறது. செந்நெருப்பினைத்தகடு செய்து உருக்கி வார்த்தாற் போலப் பரிதியின் தோற்றம் என் கண்ணுக்குத் தெரிகிறது. நேரம் செல்லச் செல்லப் பருதிக் கோளத்தைச் சூழ்ந்திருந்த முகில்கள் தீப்பற்றி எரிவதைப் போலத் தெரிகின்றன.நீலவானில் மிதக்கும் தங்கக்குடம் போலப் பருதிக் கோளம் காட்சி தருகிறது. அதேவேளை வானமங்கையானவள் மஞ்சள் குளித்து முகம் மினுக்கித்தன் காதலனை வரவேற்க வரும் அழகுக் காட்சி தெரிகிறது.
இந்த மாலை மயக்கத்தில் திளைத்திருந்த மக்களை அவர்களது இல்லங்களுக்குச்செல்லும் நினைவினை ஊட்ட வேண்டுமெனக் கருதிப் போலும் கதிரவன் தன் செம்பஞ்சுக் குழம்பின் ஒளியினை மெல்ல மெல்ல மறைத்துக்கொண்டான். வானமங்கை தன் கருநீலப் பட்டாடையைப் போர்த்திக்கொண்டாள். சூரியக்கோளம் பந்து போல மேலை வானில் மறையும் காட்சியைப் பெருந் திரளானோர் அங்கு கண்டுகளித்தனர்.
மேற்குத் திசையை நோக்கிய வண்ணம் கடலையே பார்த்துக்கொண்டிருந்த நான் கிழக்குத் திசையைத் திரும்பிப் பார்த்தேன். என்ன அதிசயம்! என் கண்களையே நம்ப முடியவில்லை. நான் எங்கே நிற்கிறேன்? யாழ்ப்பாணத்தில் நிற்கின்றேனா? என்று ஒரு கணம் திகைத்தேன். காரணம்பனை வடலிகள் பல காட்சி தந்தமையேயாகும். கொழும்பு மாநகருக்கு வரும் உல்லாசப் பயணிகளைக் கவரும் வகையில் பனை வடலிகள் பல காலிமுகத்திடலின் வீதியோரமாக நடப்பட்டுள்ளன. காலிமுகத்திடலுக்கு வருவோரின் கவனம் இப் பனைவடலிகளின் பாலீர்க்கப்படுகிறது. பூலோக கற்பகதரு அல்லவா! அவற்றைப் புறக்கணிக்க முடியுமா?
பல வர்ணமின்விளக்குகள் காலிமுகத்திடலைச் சொர்க்கபுரியாக மாற்றிக்கொண்டிருந்தன. பட்டம் விடும் சிறுவர்கள் இந்த வர்ண ஒளியில் பட்டம் ஏற்றி விளையாடிக் கொண்டிருந்தார்கள். வானளாவிப் பறந்த அப்பட்டங்கள் வானில் தெரியும்பலவர்ணத்தாரகைகள் போற் தென்பட்டன. கொக்ககோலா குளிர்பான நிலையங்களும், குளிர்கழி (ஐஸ்கிறீம்) விற்பனை நிலையங்களும் மக்களைக் கவர்ந்திழுத்துக் கொண்டிருந்தன. மாலைப்பொழுது விடைபெற்றுக் கொண்ட போதும் காலிமுகத்திடலை விட்டுப்பிரிய மனமின்றிப் பலர் அங்கும் இங்கும் உலாவிக் கொண்டிருந்தனர்.கடல் நீரும் நீலவானும் கைகோர்க்கும் காட்சியினைக் கண்டு மகிழ்ந்தவண்ணம் யானும் இருப்பிடம் நோக்கிப் பயணமானேன். இயற்கை அன்னை எமக்களிக்கும் இன்பக் காட்சிகளில் கடற்கரைக் காட்சியும் ஒன்றாகும். அதனை எண்ணியெண்ணி என் மனதில் இன்றும் கடலலை போல் உணர்வலைகள் பொங்கி எழுந்தவாறே இருக்கின்றன. உள்ளங்கவரும் காட்சியல்லவா? எப்படி மறக்க முடியும்?
கருத்துரையிடுக