'அனைவருக்கும் கல்வி' என்ற கோஷம் இன்று உலக நாடுகள் எங்கும் ஓங்கி ஒலிக்கப்படுகிறது. அரசுகளின் இன்றியமையாக்கடமைகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது. ஒவ்வொரு நாடும் தனது வருமானத்திற் பெரும் பகுதியைக் கல்விக்காகச் செலவிடுகிறது. ஆனால் இதன் பயன்பாடு பூரணத்துவமுள்ளதாக அமைகின்றதா? என்பது சிந்தனைக்குரியதாகவே விளங்குகின்றது.
மனித சமுதாயம் பலவகையான மக்கட் கூட்டத்தைக் கொண்டுள்ளது. படித்தவர், பாமரர், செல்வர்கள், ஏழைகள், நல்லவர்கள், தீயவர்கள் எனப் பல்வேறு பாகுபாடுகள் நிலவுகின்றன. சமுதாயத்தில் இத்தகைய ஏற்றத்தாழ்வுகள் இருக்க வேண்டுமா? இவை அவசியந்தானா? என்றால் இல்லையென்றே கூறுவர். எனவே இதுபற்றி நாம் நன்கு சிந்திக்க வேண்டும். மனிதனுக்கும் மற்றைய பிராணிகளுக்கும் உள்ள வேறுபாடு பகுத்தறிவு என்பதாகும். பகுத்தறிவே மனிதனை உன்னத நிலைக்கு இன்றுவரை உயர்த்தி வைத்துள்ளது. இதன் மூலமே மனிதன் மொழிகளை உருவாக்கவும் விஞ்ஞான ரீதியில் புதியன பலவற்றை உருவாக்கவும்,புதிய உண்மைகளைக் கண்டுபிடிக்கவும் முடிகிறது.
காலந்தோறும் தாம்கண்டறிந்த உண்மைகளைத் தத்தம் மொழிகளில் பதிந்து வைத்தும் பயன்படுத்தியும் முன்னேற்றம் கண்டுள்ளனர். தாம் அடைந்த முன்னேற்றத்தை நிலைநாட்டவும், தத்தமக்கேற்ற வழிகளில் பயன்படுத்தவும் கல்வியே மனித சமுதாயத்திற்கு உகந்த ஒரேயொரு சாதனமாகத் திகழ்கிறது. கல்வியின் மூலமே ஒரு சமுதாயத்தின் பண்பாடும் விழுமியங்களும் அழிந்தொழியாது பாதுகாக்கப்பட முடியும். இந்நிலையில் மனித சமுதாயத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளைப் போக்கி எல்லோரும் ஓர் இனம் என்ற உயர்ந்த குறிக்கோளுடன், சமத்துவமாகச் சகலரும் வாழ்வதற்குரிய வழியினைக் காட்டவல்லது கல்வி ஒன்றேயாகும். எல்லோரும் சமத்துவமாக, எல்லாம் பெற்று வாழ வேண்டுமாயின் அனைவருக்கும் உகந்த கல்வி அளிக்கப்படுதல் அவசியமாகும்.
நாம் வாழும் சமுதாயத்தை ஒரு உடலாக உருவகிப்போமாயின் அந்த உடலில் உள்ள எந்த உறுப்பையும் நாம் ஏற்றது அல்ல என ஒதுக்கி விடமுடியாது. ஓர் உறுப்புக்கு ஊறு நேர்ந்தால் அது உயிரின் இயக்கத்திற்கே பாதிப்பை ஏற்படுத்திவிடும். இதேபோன்று தான் கல்வி என்பது ஒரு சமுதாயத்தின் உயிர் மூச்சாயமைந்துள்ளது. சமுதாய உறுப்புக்கள் யாவிலும் கல்வி தனது ஆதிக்கத்தைச் செலுத்துகிறது. அதற்குப் பங்கம் விளைந்தால் சமுதாயமே பெரிதும் பாதிப்புறும். கல்வி என்பது நமது கண்போன்றது. கல்விக்கண் இன்றேல் நாம் கண்ணிருந்தும் குருடராகவே கருதப்படுவோம். எனவே அனைவருக்கும் கல்வி அளிப்பதன் மூலமே சமுதாயம் ஒளிபடைத்த சமுதாயமாகத் திகழமுடியும்.
'விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோ டேனையவர்'
என்பது வள்ளுவர் வாக்கு. மனிதன் விலங்காக வாழக்கூடாது. அவன் மனிதனாக, மனிதப் பண்புள்ளவனாக வாழவேண்டும். அதற்குக் கல்வியே அச்சாணி. ஒரு சமுதாயத்தில் ஒரு பகுதியினர் கல்வியறிவு படைத்த மனிதராகவும் மற்றப் பகுதியினர் கல்வியறிவில்லாத மாக்களாகவும் வாழ நேர்ந்தால் அந்தச் சமுதாயம் சீர்பெற முடியாது. முழுச்சமுதாயத்திற்குமே அது பெரும் இழுக்காகும். இவ்வுண்மையை நன்குணர்ந்தமையாற்றான் ஒவ்வோர் நாட்டரசும் தனது குடிமக்களுக்குக் கல்வியளிப்பதைப் பெரும் கடனாகக் கொண்டு செயற்பட்டு வருகிறது. ஒரு குறிப்பிட்ட வயதுவரை கட்டாயக்கல்வி புகட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. ஆனால் அரசு அளிக்கும் வாய்ப்பினைப் பயன்படுத்தாது சிலர் வறுமை, அறியாமை.
'அலட்சியம் காரணமாகத் தங்கள் பிள்ளைகளின் கல்வியிற் கவனம் செலுத்தாது விடுகின்றனர். இதனால் வருங்காலப் பிரசைகளான மாணவர்கள் பலர் கல்வி பெறும் வாய்ப்பினை இழந்து விடுகின்றனர். வீட்டு வேலைகளுக்கும் வியாபார நிலையங்களுக்கும், கூலித் தொழில்களுக்கும் செல்லும் மாணவர்கள் கல்வியின் அருமையை அறியாது பின்னாளில் இரங்க வேண்டிய நிலைக்குள்ளாகின்றனர்; பெற்றோர்களின் தவறு குறித்து வருந்துகின்றனர். படிக்கும் காலம் பொற்காலம் என்பர். அக்காலத்தை இழந்து விடும் மாணவர்கள் கல்விக்கண்ணை இழந்தவர்களாகின்றனர். இது பெரும் கொடுமை. இக்கொடுமை ஒழிய வேண்டுமாயின் அனைவருக்கும் கல்விபுகட்டப்பட வேண்டும்.
'எளிமையினால் ஒரு தமிழன் படிப்பில்லை யென்றால் இங்குள்ள எல்லோரும் நாணிடவும் வேண்டும்' என்றார் பாவேந்தர் பாரதிதாசனார். இதற்கமைய எல்லோருக்கும் கல்வி புகட்ட ஏற்றன யாவும் செய்யப்பட வேண்டும்.
'அனைவருக்கும் கல்வி' என்றால் குடிமக்கள் அனைவருக்கும் எழுத வாசிக்கத் தெரிந்தாற் போதும் என நாம் கருதிவிடக் கூடாது. ஒருவன் தான் பெற்றுக் கொண்ட கல்வியால் தனக்கும் தான் வாழும் சமுதாயத்திற்கும் பயன்படும் அளவிற்கு அவனது கல்வி அமைதல் வேண்டும். எல்லோரும் பொறியியலாளர்களாகவோ, பேராசிரியர் களாகவோ, மருத்துவர்களாகவோ ஆகி விட வேண்டும் என எதிர்பார்ப்பதும் தவறு. அவரவர் தம் ஆற்றலுக்கேற்பத் தொழிற்றுறைக் கல்வியையோ, தொழில்நுட்பக் கல்வியையோ, நுண்கலைக்கல்வியையோ பெறும் வாய்ப்பினை நல்கிட வேண்டும். அத்தகைய வாய்ப்பும் வசதியும் கிட்டும் போதுதான் அனைவருக்கும் கல்வி' என்ற சொற்றொடர் பொருளுடையதாக அமையும்.
இன்று இத்தகைய பொருளுடையதான கல்வியைப் பெறுதற்குப்பல்வேறு முட்டுக்கட்டைகள் போடப்படுகின்றன. இன, மத, சாதி வேறுபாடுகள் குறுக்கிடுகின்றன. கிராமப்புற மாணவர்க்கும் நகர்ப்புற மாணவர்களுக்குமிடையே கல்வி வசதிகளை அளிப்பதில் பாகுபாடுகள் காணப்படுகின்றன. பணம் படைத்தோர் பிள்ளைகள் அனுபவிக்கும் வாய்ப்பு வசதிகள் ஏழை மாணவர்களுக்கு எட்டுவதா யில்லை. இந்நிலை மாற வேண்டும். எல்லா மாணவர்களுக்கும் எல்லா வசதிகளும் கிட்ட வேண்டும். அத்தகைய ஒரு சூழ்நிலையிற்றான் 'அனைவருக்கும் கல்வி' என்ற சொற்றொடர் அர்த்தமுள்ளதாக அமையும் என்பது உறுதி.
கருத்துரையிடுக