அன்று ஞாயிற்றுக்கிழமை. பூரணை நாள். வெண்ணிலவு வானில் இரவைப் பகலாக்கிக் கொண்டிருந்தது. தென்றல் காற்று மெல்லென வீசி உடலுக்கு இன்பமளித்தது. மாலை ஏழுமணி. கொழும்புத்துறையில் இருந்து இராமேஸ்வரம் நோக்கி எங்கள் படகு புறப்பட்டபோது எல்லாம் அமைதியாகவே இருந்தது. எப்படியும் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். நல்லபடியாக நாங்கள் இராமேஸ்வரத்தைச் சென்றடைய வேண்டும் என்று படகில் இருந்தோர் அனைவரும் இறைவனை வேண்டிக்கொண்டோம்.
சற்று நேரத்தின் பின் யாழ்ப்பாண நகரில் வாண வேடிக்கை போன்று ஷெல் சத்தங்களும் துப்பாக்கி வேட்டொலிகளும் கேட்டன. கண்ணைப்பறிக்கும் மின் ஒளிகள் 'பளிச்' 'பளிச்' செனத் தெரிந்தன. கடல் அலைகளைக் காற்று வருட, இதயங்களைப் பயம் என்னும் பருந்து கௌவிக் கொள்ளப் படகில் எல்லோரும் சோகத்துடன் அமர்ந்திருந்தோம். குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள், முதியோர்கள் என்று எல்லாமாக நூற்றுப் பத்துப் பேர்வரை பயணிகள் இருந்தோம். அனைவரும் தங்கள் இல்லங்களைவிட்டு, ஆண்டாண்டு காலமாக வாழ்ந்த இடங்களை விட்டு, உயிரைக் காப்பாற்றினாற் போதும் என்ற ஒரே நோக்குடன் படகேறியவர்கள்.
அவர்கள் தம் பயணத்தின் நோக்கமும் அதுவே. காற்றிலும் கடிய வேகத்தில் இரு இயந்திரங்கள் பூட்டப்பெற்ற எங்கள் படகு விரைந்து கொண்டிருந்தது. கடற் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள கடற்படைக்கப்பல்களுக்குத் தெரியாமல் இந்தியக் கடல் எல்லையை எட்டிப் பிடித்திட வேண்டும் என்ற குறிக்கோளுடன் மாலுமிகள் படகை விரைந்து செலுத்தினர். இருமணி நேரத்தின் பின் எங்கள் படகு இந்தியக்கடல் எல்லைக்குள் புகுந்து - விட்டதாக மாலுமிகள் கூறினர். இனிப்பயம் இல்லை. இன்னும் இரண்டு மணித்தியாலங்களில் இராமேஸ்வரக்கரையைச் சென்றடைந்து விடுவோம் என்றும் அவர்கள் எங்களுக்குத் தேறுதல் கூறினார்கள். ஆனால் பயணிகள் மனதில் இன்னும் பயம் நீங்கவில்லை என்பதை அவர்களது முகக்குறிகள் காட்டின.
திடீரென வானம் இருண்டது. பலத்த குளிர்காற்று வீசியது. சிறிது நேரத்தில் பெரும் இடிமுழக்கம், மின்னல் கண்களைக் கூசச் செய்தது எவருமே எதிர்பார்க்கவில்லை. பேரிரைச்சலுடன் புயற்காற்று சுழன்றடிக்கத் தொடங்கியது. இதுவரை அலைக்கரத்தால் படகை அணைத்துச் சென்ற பேரலைகள் சீறி எழுந்து படகுக்கு மேலாகவும் பாய்ந்தன. பயணிகளைப்பயம் கௌவிக் கொண்டது. என்ன நேருமோ? என்று எல்லோரும் ஏங்கினர். கடல் அலைகளின் சீற்றத்தால் படகு வெறிகாரன் போல அங்கும் இங்குமாகத் தளம்பித் தடுமாறுகிறது.
படகோட்டிகளின் முகங்களிலும் பீதி தென்படுகிறது. போதாக்குறைக்கு மழையும் கொட்டத்தொடங்கியது. யான் படகின் அணியத்தில் கட்டப்பட்டிருந்த கயிறு ஒன்றைப் பிடித்தபடி இருந்தேன். படகு கடலலைகளின் சீற்றத்திற் கேற்ப மேலெழுந்தும் தாழ்ந்தும் திசை தெரியாது போய்க் கொண்டிருந்தது. சிறிது நேரத்தின் பின் 'படார்...' என்றொரு சத்தம் கேட்டது. நாங்கள் பயணம் செய்த படகு கற்பாறை ஒன்றுடன் மோதி உடைந்து விட்டது. ஒரே கூக்குரல். 'ஐயோ' முருகா! கர்த்தரே! எங்களைக் காப்பாற்று.
ஏதிலிகளாக வந்த எங்களைச் சோதிக்காதே! இறைவா! இறைவா!! என்று கூக்குரலிடுகிறார்கள் பயணிகள். படகின் உடைந்த ஒரு மரக்கட்டையைப் பிடித்துக் கொண்டு கடலில் மிதக்கிறேன் நான். மற்றவர்கள் கதி எதுவோ அறியேன். இப்படியே கடலில் என் பலம் கொண்ட மட்டும் மரக்கட்டையை விடாது பிடித்தவண்ணம் கால்களையும் கைகளையும் அடித்தபடி என் உயிரைக் காப்பாற்றிக் கரை சேர முயற்சிக்கிறேன். இத்தனை துன்பத்துக்கும் மத்தியிலும் எனக்கோர் கைவிடான் என்ற ஆறுதல். எனது ஊர்க்குளத்தில் சிறுவயதிலேயே எனக்கு நீச்சல் பழக்கிய தந்தையாரை நினைக்கின்றேன்.
அவர் பழக்கிய பயிற்சி இப்போது என் உயிரைக் காப்பாற்ற உதவுகிறது என்பதே அந்த ஆறுதலுக்குக் காரணம், என் குலதெய்வமாகிய முருகன் என்னைக் நம்பிக்கையில் நீந்திக் கொண்டிருக்கிறேன். இப்பொழுது புயல் அடங்கி விட்டது. வானத்தைக் கௌவியிருந்த இருள் சிறிது சிறிதாக விலகிக் கொண்டிருக்கிறது. கடல் அலைகள் வேகம் தணிந்து அமைதி கொள்கின்றன. யான் தொடர்ந்து நீந்திக் கொண்டே இருக்கிறேன். என்னுடன் படகில் வந்தோர் கதி என்னவோ என்ற கவலையும் மனத்தைச் சஞ்சலப்படுத்துகிறது. எல்லாம் இறைவன் செயல் என்ற நெஞ்சுறுதியுடன் தொடர்ந்து நீந்துகிறேன்.
பலமணிநேரம் கடந்திருக்கும். கடலலைகளில் தத்தளித்துக் கொண்டிருந்த யான் மண்மேடொன்றை வந்தடைந்தேன். நாற்புறமும் கடல் நடுவே சிறுமேடு. அந்த மேட்டில் கைகள் சலிக்க, கால்கள் நடுங்கக் குப்புறப்படுத்து விட்டேன். எவ்வளவு நேரம் கிடந்தேனோ? தெரியவில்லை. காலைக் கதிரவனின் ஒளி என் மேனியில் 'சுளீரெனச் சுட்டது. விழித்துப் பார்த்தேன். தூரத்தே மீன்பிடிப் படகொன்று வந்து கொண்டிருந்தது. என் பலம் கொண்டமட்டும் சத்தமிட்டு அதனை அழைத்தேன்.
என் நல்ல காலம். மீன்பிடிப்படகு என்னருகே வந்தது.நடந்த நிகழ்வுகளை அப்படகில் இருந்தோரிடம் கூறினேன். அவர்கள் என்மீதுஇரக்கம் கொண்டனர். படகில் ஏறுமாறு கூறினர். இறைவா இதுவும் உன் திருவிளையாடலா? என்று நினைத்த வண்ணம் அப்படகில் ஏறினேன். படகுக்காரர்கள் என்னை இராமேஸ்வரக் கரையருகே இறக்கி விட்டார்கள். யான் சிறிது தூரம் கடலில் நடந்து இராமேஸ்வரக் கரையை அடைந்தேன். இந்திய காவற்படையினர் என்னை விசாரித்தனர். யான் நடந்தவற்றைக்கூறினேன். அவர்கள் என்னை மண்டபம் முகாமிற்கு அழைத்துச் சென்றனர். யான் உயிர் பிழைத்து விட்டேன். ஆனால் என்னுடன் படகில் பயணம் செய்தோர் பலரும் கடலில் மூழ்கி இறந்து விட்டனர் என்பதை எண்ணும்போது என்னுள்ளம் வேதனைத் தீயில் வேகின்றது.
கருத்துரையிடுக