நான் கண்ட பொருட்காட்சி

 நான் மகிழூர் மத்திய கல்லூரியில் கல்வி கற்கிறேன். எமது கல்லூரியில் முதலாம் வகுப்பு முதல் பதின்மூன்றாம் வகுப்புவரை  வகுப்புக்கள் உள்ளன. விஞ்ஞானம், கலை, வர்த்தகப் பிரிவுகளில் 180 மாணவர்கள் வரை உயர் கல்வி பயில்கின்றனர். இவர்களைவிடப் பாலர் வகுப்புத் தொடக்கம் பதினொராம் வகுப்புவரை 1200 மாணவர்கள் உள்ளனர். இம்மாணவர்களைக் கொண்டு விஞ்ஞானம், கணிதம், வர்த்தகம், மொழி, சித்திரம், விவசாயம், மனைப்பொருளியல் தொடர்பான கல்விக் கண்காட்சி ஒன்றை நடத்துவதென எமது அதிபரும் ஆசிரியர்களும்தீர்மானித்தனர். இது குறித்துச் சகல மாணவர்களுக்கும் அறிவிக்கப்பட்டது.பொருட்காட்சி நடைபெறும் நாட்களை மாணவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.


சென்ற தவணை விடுமுறைக்கு முன் உள்ள மூன்று நாட்களும் எமது கல்லூரியில் இக்கல்விக் கண்காட்சி நடைபெற்றது. கல்லூரியிலுள்ள நான்கு மண்டபங்கள் இதற்கென ஒதுக்கப்பட்டிருந்தன. நாற்பது அறைகளில் இக்கண்காட்சி பாட ஒழுங்கின் அடிப்படையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. கல்லூரி வாயிலில் கோபுர அமைப்பில் கண்காட்சியை ஒட்டி அழகிய சித்திர வேலைப்பாடுகளுடன் கூடிய சிகரம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. கண்காட்சி நடைபெறும் மண்டபங்கள் நான்கும் அழகாக அலங்கரிக்கப் பட்டிருந்தன. ஒவ்வோர் மண்டப வாயிலிலும் அம்மண்டபத்திலுள்ள கண்காட்சி அறைகள் தொடர்பான அட்டவணைகள் தொங்கவிடப்பட்டிருந்தன. கண்காட்சி அறைகளுக்குச் செல்லும் வழியையும் திரும்பும் வழியையும் காட்டும் அட்டைகள் பெரிதாக வைக்கப்பட்டிருந்தன.

முதலாவது மண்டபத்திலுள்ள பத்து அறைகளிலும் ஆரம்ப வகுப்பு (1-5 வரை) மாணவர்களின் ஆக்கப் பொருட்களும், கற்பித்தற் சாதனங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. ஆரம்ப வகுப்பு ஆசிரியர்கள் சிறுவர்களைக் கொண்டு சிக்கனமான முறையில் தயாரித்த பொருட்களே அங்கு அதிகம் காணப்பட்டன. பயன்படுத்தப்பட்ட கழிவுப் பொருட்களான கடதாசிகள், சோடாமூடிகள், சிகரட் பெட்டிகள், தென்னங்குரும்பைகள், ஈர்க்குகள், சிப்பிகள், சோழிகள், விதைகள் போன்றவற்றைப் பயன்படுத்திச் செய்யப்பட்ட பொருட்கள் சிறுவர்களின்

ஆக்கத்திறனை வெளிப்படுத்துவனவாக அமைந்திருந்தன. ஒரு அறையில் சிறுவர்கள் வரைந்த சித்திரங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. நிகழ்கால நிகழ்வுகளை, சிறுவர்கள் தாம் கண்ணாற் கண்டவற்றைத் தம் ஆற்றலுக்கேற்பச் சித்திரங்களாகத் தீட்டியிருந்தனர்.

இரண்டாம் வகுப்பு மாணவர்கள் தென்னங்குரும்பைகள், ஈர்க்குகள், வண்ணக் கடதாசிகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி தேர்கள் பலவற்றை ஆக்கியிருந்தனர். அவை ‘தேர் வருகுது தேர் வருகுது' என்ற தலைப்பில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. சின்னஞ் சிறுவர்களின் பிஞ்சுக் கரங்கள் உருவாக்கிய இத்தேர்கள் பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்தன. மூன்றாம் வகுப்பு மாணவர்கள் ஒவ்வொருவரும் தாம் சுயமாக ஆக்கிய ‘எனது புத்தகம்' காட்சியில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றிருந்தது. தாம் விரும்பும் பாடல்கள், கதைகள், விடுகதைகள், சித்திரங்கள் என்பனவற்றைக் கொண்டதாக இப்புத்தகங்கள் ஆக்கப்பட்டிருந்தன. இவை மாணவர்க்கும், பார்வையாளர்களுக்கும் மனநிறைவை அளித்தன.

இரண்டாவது மண்டபத்தில், ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையான மாணவர்களின் காட்சிப் பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. இவை பாட ரீதியாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. ஏழாம் வகுப்பு மாணவர்கள் சமூகக் கல்விப் பாடம் தொடர்பாக செய்து இலங்கையின் வடிவமைப்பைக் களிமண்ணாற் நிறந்தீட்டியிருந்தனர். மகாவலிப்பிரதேசம், கலாசார முக்கோணப்பகுதிகள், நீர்வீழ்ச்சிகள், மலைகள் போன்றவையும் குறிப்பிட்டுக் காட்டப்பட்டிருந்தன. பார்வையாளர்கள் இவ்வடிவமைப்பைப் பாராட்டினர். சமூகக் கல்வி, வரலாறு தொடர்பான அட்டவணைகள், தேசப்படங்கள் என்பனவும் இம்மண்டபத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இம்மண்டபத்தில் விவசாயம், மனையியல், கணிதம், விஞ்ஞான சம்பந்தமான காட்சிப் பொருட்களும் இடம்பெற்றிருந்தன.

மூன்றாவது மண்டபத்தில் பத்தாம், பதினொராம் வகுப்பு மாணவர்களதுஆக்கங்களும் கற்பித்தற் சாதனங்களும் இடம் பெற்றிருந்தன. இம்மண்டபத்தில் விஞ்ஞானம், மனையியல், விவசாயம் தொடர்பான உபகரணங்களை மட்டுமன்றி அவற்றிற்கான செயன் முறை விளக்கங்களையும் மாணவர்களே வழங்கியமை பாராட்டத்தக்கதாக இருந்தது. பார்வையாளர்கள் எழுப்பிய வினாக்களுக்கெல்லாம் மாணவர்கள் செய்முறை மூலம் விளக்கமளித்தனர். மனைப் பொருளியல் கற்கும் மாணவிகளின் கைவண்ணத்தில் உருவான அழகுப்பொருட்கள், தையற் பொருட்கள், சிற்றுண்டிவகைகள் என்பனவும் பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்தன. முதலுதவி வழங்கும் அறை, நோயாளர் பராமரிப்பு அறை போன்றவையும் இங்கு இடம் பெற்றிருந்தன.

இவை செயல் மூலம் கற்றலைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருந்தன. செயல்மூலம் இங்கு விளக்கம் அளிக்கப்பட்டது. பதினொராம் வகுப்பிற் கற்கும் நான் பலநாட் படித்து அறிய வேண்டிய விடய அறிவையும் அனுபவங்களையும் இக்கண்காட்சியிலிருந்து இந்த மூன்று நாட்களிலேயே பெறக்கூடியதாய் இருந்தது என்றால் அது மிகையல்ல. நான்காவது மண்டபத்தில் பன்னிரண்டாம், பதின்மூன்றாம் வகுப்பு விஞ்ஞான, கணித, வர்த்தக, கலைப்பிரிவு மாணவர்களின் ஆக்கங்கள் முக்கிய இடம் பெற்றிருந்தன. இவற்றைப் பார்வையிட்ட அயற் பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் குறிப்பெடுத்துக் கொண்டமை இவற்றின் தரத்திற்குச் சான்று பகர்வனவாயிருந்தது.

இவற்றைப் பார்வையிட்ட உயர்தர வகுப்பு மாணவர்கள் மட்டுமன்றி ஆசிரியர்களே பெரிதும் பாராட்டியமை எமது கல்லூரிக்குப் பெருமை தருவதாயிருந்தது. வர்த்தக பாட. மாணவர்கள் தயாரித்திருந்த அட்டவணைகள், வர்த்தகம் கற்கும் மாணவர்களுக்குப் பெரிதும் பயன்படும் வகையில் அமைந்திருந்தன. கண்காட்சியைப் பார்வையிட்ட அயற் மாணவர்கள் அவற்றைப் பார்த்துக் குறிப்பெடுத்துக்கொண்டமை மூலம் இதனை உணரமுடிந்தது.பாடசாலை கலை வகுப்பு மாணவர்கள் காட்சிப்படுத்தியிருந்த இலக்கிய வரலாறுதொடர்பான குறிப்புக்கள், அட்டவணைகள், அறிஞர்களின் படங்கள் என்பனவும் கண்காட்சிக்கு மெருகூட்டுவனவாய் அமைந்திருந்தன. எல்லாவற்றிற்கும் மேலாக எங்கள் கல்லூரி உயர்தர வகுப்பு ஆசிரியர்களால் தயாரிக்கப்பட்ட கல்விச் சீர்திருத்தப் புனரமைப்புத் தொடர்பான அட்டவணைகளும் மாதிரி வடிவங்களும் பெற்றோர்களும்

ஆசிரியர்களும் கல்விப் புனரமைப்புத் தொடர்பான விடயங்களை இலகுவாக விளங்கிக் கொள்ளத் தக்கதாக இருந்தது. சுருங்கக்கூறின் இக்கண்காட்சியானது மாணவர்களின் ஆக்கத் திறனையும் அறிவுத்திறனையும் வெளிக்காட்டும் வகையில் அமைந்திருந்தது. ‘இன்றைய சூழ்நிலையில் இத்தகைய கண்காட்சி ஒன்றினை அறிவும் திறனும் அழகும் கவர்ச்சியும் ஒருங்கமைய, ஏனைய பாடசாலைகளுக்கு ஓர் எடுத்துக் காட்டாக ஒழுங்கு செய்த உங்கள் கல்லூரி அதிபர், ஆசிரியர், மாணவர்கள் அனைவரையும் பாராட்டுகிறேன்.

இதுமகத்தானதோர் சாதனையாகும். இத்தகைய கண்காட்சிகள் எமது வலயத்தில் உள்ள ஏனைய பாடசாலைகளிலும் நடைபெற வேண்டுமென விரும்புகிறேன்' என்று இக்கண்காட்சியின் போது பிரதம விருந்தினராகக்கலந்து கொண்ட வலயக் கல்விப்பணிப்பாளர் கூறியமை முற்றிலும் பொருத்தமானதே.இக்கண்காட்சி எமது கல்லூரியின் மகத்தான சாதனையென்றே கருதுகிறேன். கல்லூரி மாணவி என்ற வகையில் எனது கல்லூரி குறித்து உண்மையிலேயே யான் பெருமை கொள்கிறேன். மேன்மேலும் எனது கல்லூரி சாதனைகள் நிலைநாட்ட உழைக்க வேண்டுமென உளமார விரும்புகிறேன். மாணவர் தம் கல்விக் கண்திறக்கும் கண்காட்சிகளைக்காண்பதும் இன்பந்தானே!

கருத்துரையிடுக

Post a Comment (0)

புதியது பழையவை