கட்டுரை வகைகள் மற்றும் கட்டுரை எழுதும் முறை



 கட்டுரைத்தல் என்பது உறுதியாகச் சொல்லுதல், தெளிவாகக் கூறுதல் என்று    பொருள்படும். எண்ணங்களை ஒரு கட்டுக்கோப்புடன் முறைப்பட ஒழுங்குபடுத்தி அமைத்தல் கட்டுரையாகும். எழுதுபவர் தமது கருத்துக்களையும் எண்ணங்களையும் ஒழுங்குற எழுதுவது கட்டுரை எனப்படும்.

எழுதுபவர் தமது அனுபவங்கள், எண்ணங்கள், செய்திகள், கற்பனைகள், நகைச்சுவை, அறிவியல், அரசியல் சார்ந்த விடயங்களை உள்ளடக்கியதாகப் பல்வேறு விதமாகக் கட்டுரைகளை எழுதுவர். ஆங்கிலத்தில் கட்டுரை (Essay) என்ற சொல்லுக்கு இணையான ஆங்கிலச் சொல்லாக முயற்சி (Attempt) என்று பொருள் கொள்ளப்படும். ஒருவர் தமது எண்ணங்களைச் சொல்லுவதற்குச் செய்யப்படும் முயற்சியே கட்டுரை  எனப் பொருள் கொள்ளப்படும் என்பர் அறிஞர்.

பாடசாலையில் மாணவர்கள் எழுதும் கட்டுரைகள் பலவகைப்படும். பல நூல்களைப் படிப்பதால் ஏற்படும் அறிவு, ஆழம் என்பனவும், பிற அறிஞர்களுடன் உரையாடுவதால் பெற்றுக் கொள்ளும் அறிவும் அவர்களது மனதிற் பதிந்து உரிய சந்தர்ப்பங்களில் அவற்றை நினைவு கூர்ந்து பிரயோகிக்கும் திறன் கட்டுரைகள் மூலம் வெளிப்படுத்தப்படுகின்றது

மாணவர்கள் எழுதும் கட்டுரைகள் மிக நீண்டதாக அமைய வேண்டும் என்கிற அவசியம் இல்லை. அவர்கள் எழுதும் கட்டுரைகள் எழுதுவதற்கான பயிற்சி என்றே கொள்ளப்படும். குறிப்பிட்ட ஒரு தலைப்பில் மாணவர்கள் தங்களுடைய எண்ணங்களை ஒழுங்காகவும், கட்டுக் கோப்புடனும் வெளிப்படுத்த. முயற்சிப்பதே அவர்கள் கட்டுரை எழுதுவதற்கான நோக்கமாகக் கொள்ளப்படும்.


மாணவர்கள் எழுதும் கட்டுரைகளில் பின்வரும் அம்சங்கள் முக்கிய    இடம்பெற வேண்டுமெனக் கருதப்படும். 

அவையாவன:

  • ஒருமைப்பாடு
  • ஒழுங்கு
  • சுருங்கக் கூறி விளங்க வைத்தல்
  • சீரான மொழி நடை
  • தனித்தன்மை


i) ஒருமைப்பாடு

எக்கட்டுரையானாலும் அதில் ஒருமைப்பாடு இருத்தல் அவசியமாகும். அதாவது சொல்ல வந்த விடயத்தைக் குறிப்பிட்ட நோக்குடன் கூறுவதாக அது அமைய வேண்டும். எடுத்துக் கொண்ட விடயத்தைப் பற்றி எழுதுபவர் மனதில் முதலில் ஒரு தெளிவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் விடய வரம்பைத் தாண்டி வெளியில் செல்லக் கூடாது. அதாவது தாம் சொல்ல வந்த விடயத்திற்குச் சம்பந்தமில்லாத வேறு தகவல்களைக் கொடுத்தல் கூடாது. அதேவேளை சொல்ல வந்த

விடயத்திற்குப் பொருத்தமான தகவல்களைப் பல்வேறு கோணங்களில் இருந்து எடுத்துரைத்தல் தவறாகாது.


ii) ஒழுங்கு

எழுதுபவர் தமது எண்ணங்களை வெளியிடுவதில் ஒழுங்கு பின்பற்றப்படவேண்டும். தமது கருத்துக்களைக் குறிப்பிட்ட ஒரு முடிவை நோக்கி அழைத்துச் செல்வதாக இருத்தல் வேண்டும். மனதில் தோன்றுபவை அனைத்தையும் எழுதிவிடலாகாது. விடயத்தில் ஒருமைப்பாடு இருப்பதோடு விடயத்திற்கு மேலும் வலுவூட்டும் வகையில்

விளக்கமளிப்பதிலும் ஒருமைப்பாடு இருத்தல் அவசியமாகும். எனவே கட்டுரையினை எழுதுமுன் எண்ணங்களை ஒழுங்குபடுத்தி நன்கு சிந்தித்துச் சட்டகம் ஒன்றை வகுத்துக் கொண்டு எழுத முற்பட வேண்டும்.


iii) சுருங்கக் கூறி விளங்க வைத்தல்

பாடசாலை மாணவர்கள் எழுதும் கட்டுரைகள் வகுப்புகளுக்கு ஏற்ப விரிவடைந்து செல்லும். மிக நீளமான கட்டுரைகள் எதிர்பார்க்கப்படுவதில்லை. முந்நூறு சொற்கள் முதல் ஐந்நூறு சொற்கள் வரை அவை அமையலாம். கூடுமானவரை சுருங்கக் கூறி விளங்க வைக்கும் முறையில் அவை அமைதல் வேண்டும். எடுத்த விடயத்தைச்

சுருக்கமாகவும், விளக்கமாகவும் எழுதுதலே சிறப்புடையதாகும்.


iv) சீரான மொழி நடை

கட்டுரையில் பயன்படுத்தப்படும் வார்த்தைகள் பண்புடையனவாக அமைதல் வேண்டும். சீரான மொழிநடையில் இலக்கிய அழகுடன் எழுதப்படும் கட்டுரைகள் சிறந்தனவாகும். பேச்சு வழக்குச் சொற்களை (கொச்சையான வார்த்தைகளை) அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். வாக்கியங்கள் எளிமையாகவும், இயற்கையானதாயும் இருத்தல் வேண்டும். எண்ணங்கள் தெளிவாக இருப்பின் மொழிநடையும் சிறப்பாக அமையும். கட்டுரையின்மொழிநடையே எழுதுபவரின் ஆற்றலைப் பிரதிபலிக்கும் கண்ணாடி என்பதை மறத்தல் கூடாது.


v) தனித்தன்மை   

கட்டுரை எழுதுவோர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் தனித்தன்மை உண்டு. கட்டுரையை வாசிக்கும் போது அத்தனித்தன்மை நன்கு பிரகாசிக்கும். எழுதுகின்றவர் தன்னுடைய எண்ணக் கருத்துக்களை வெளியிடும்போது இந்தத் தனித்தன்மை தானாகவே வெளிப்படும். மேற்கூறிய ஐந்து அம்சங்களும் நல்ல முறையில் இடம்பெறும்போது கட்டுரை சிறப்பானதாக அமையும். பொருத்தமான தலைப்பு, சொல்லும் முறையில் ஒழுங்கு, விடயத்தெளிவு, மொழிநடை ஆகியன அனைத்தும்

அடங்கியதாகக் கட்டுரை ஒன்று அமைந்திருப்பின் அதனை முழுமையுற்ற

கட்டுரை வடிவமாக ஏற்றுக் கொள்வர்.


கட்டுரை வகைகள்:

மாணவர் எழுதத்தக்க கட்டுரைகளைப் பொதுவாக ஐந்து வகையாக வகைப்படுத்துவர். 

அவையாவன:

வரலாறுகளை (சம்பவங்களை)க் கூறும் கட்டுரைகள்
வருணனைக் கட்டுரைகள்
சிந்தனைக் கட்டுரைகள்
விளக்கக் கட்டுரைகள்
கற்பனைக் கட்டுரைகள்

உயர்தர வகுப்புக்களில் இவை மேலும் விரிவடையும். அவற்றைப் பின்வரும் வகைகளில் அடக்கலாம்.

1) தற்சார்புக் கட்டுரைகள்

சுய விருப்பு, வெறுப்பு, அனுபவங்கள், வகையில் இவை அமையும். உதாரணம்: எனக்குச் சிறகிருந்தால், மாணவர்களின் அபிப்பிராயங்கள், நினைவுகள் போன்றவற்றைச் சுவைபட விளக்கும் நான் ஓர் எழுத்தாளனானால்.

2) வரலாற்றுக் கட்டுரைகள்

ஒன்றின் வரலாற்றை ஒழுங்குறக் கூறும் வகையில் எழுதப்படுவன.(பெரியார் வரலாறு, சுயசரிதை போன்றன.

3) வருணனைக் கட்டுரைகள்

ஒரு விடயம் தொடர்பாக வருணித்துக் கூறுவது வருணனைக்கட்டுரையாகும். (கடற்கரையில் ஒரு மாலைப்பொழுது, நான் கண்ட வெள்ளப்பெருக்கு, நான் பார்த்த திரைப்படம் போன்றவை.

4) விளக்கக் கட்டுரைகள்

ஒரு பொருளை விளக்கமாக எடுத்துக் கூறி வாசிப்போரைத்தெளிவுபடுத்தும் வகையில் அமைவது. (சூழல் மாசடைதலைத் தடுப்போம், விஞ்ஞானத்தின் விந்தைகள், கணனிக் கல்வியின் அவசியம், ஜனநாயகத்தைப் பாதுகாப்போம் போன்ற விடயங்கள்.

5) கற்பனைக் கட்டுரைகள்

இல்லாத ஒரு விடயத்தை இருப்பதாகப் பாவனை செய்து இலக்கிய நயம்பட எழுதுவது. (மனித சஞ்சாரமற்ற தீவில் ஒரு நாள், நான்கல்வியமைச்சரானால் இத்தகைய விடயங்கள்.

6) விமர்சனக் கட்டுரைகள்

புத்தகம், நாடகம், திரைப்படம், தொலைக்காட்சி நிகழ்ச்சி போன்றவற்றைச் சீர்தூக்கித் திறனாய்வு செய்யும் (குறை, நிறைகளை விமர்சிக்கும்) வகையில் எழுதப்படுவன. (அண்மையில் பார்த்த திரைப்படம், இன்றைய புதுக்கவிதைகள், நான் படித்து மகிழ்ந்த நூல் போன்றன.

7) நகைச்சுவைக் கட்டுரைகள்

பல்வேறு வாழ்க்கை முறைகளைப் பின்னணியாகக் கொண்டு நகைச்சுவையோடு எழுதப்படுவன. (ஞாபகமறதியுள்ள ஒருவரின் வேடிக்கைச் செயல்கள், நான் வழியிற் கண்ட அதிசய மனிதர் போன்றவை.



கட்டுரையின் முக்கிய பிரிவுகள் :


முன்னுரை (ஆரம்பம்)
பொருளுரை
முடிவுரை.

முன்னுரையும், முடிவுரையும் ஒவ்வொரு பந்திக்குள் அமைய வேண்டும். பொருளுரைப்பகுதி கருத்துக்களைப் பலவழிகளில் விளக்கிக்கூறுவதால் பல பந்திகளைக் கொண்டு விளங்கும்.

முன்னுரை:
கட்டுரைத் தலைப்பினை விளக்கும் வகையிலும் கட்டுரையின் கருத்தினை வகுத்துக் கூறும் வகையிலும் முன்னுரை அமைய வேண்டும். முன்னுரை உடலுக்குத் தலை போலச் சிறப்பாக அமைந்தாற்றான் கட்டுரையில் கூறப்படும் கருத்துக்களை அறிய ஆவல் ஏற்படும். கட்டுரை முழுவதையும்படிக்கத் தூண்டும் முறையில் முன்னுரை அமைய வேண்டும்.

பொருளுரை:
கட்டுரைத் தலைப்பிற்கேற்பப் பொருள்களையும் அதில் அடங்கியுள்ள கருத்துக்களையும் பல வழிகளில் விளக்கிக் கூறும் பகுதி பொருளுரை எனப்படும். பொருளுரைப் பகுதியில் பல பத்திகள் அமையும். ஒவ்வொரு பத்தியிலும் ஒரு மையக்கருத்தும் அக்கருத்தை விளக்குகின்ற செய்திகளும் அமையும். ஆகையால், பொருளுரைப் பகுதியைப் பல பத்திகளாகப் பிரித்து, கருத்துக்களுக்கேற்பத் துணைத் தலைப்புக்களையும் கொடுத்து எழுதுதல் வேண்டும்.

முடிவுரை:
கட்டுரையின் கருத்துக்களைத் தொகுத்துக் கூறுவதாகவும் கட்டுரையின் முதன்மையான பயனை எடுத்துக் கூறுவதாகவும் இறுதிப்பகுதியில் அமைவது முடிவுரையாகும். முடிவுரையும் சிறப்பாக அமைதல் வேண்டும்.



கட்டுரை எழுதுவோர் கருத்தில் கொள்ள வேண்டியன:

கட்டுரைக்கான தகவல்களைப் பல நூல்களைப் படிப்பதன் மூலமும் கல்வி அறிவாளர்களிடம் கேட்பதன் மூலமும் திரட்டிக் கொள்ளுதல் வேண்டும்.
போதுமான தகவல்களைத் திரட்டிய பின்னர் அவற்றை நன்கு அவதானித்துக் கட்டுரைக்குத் தேவையானவை எவை என்பதைத்தேர்ந்தெடுத்துக் கொள்ளுதல் வேண்டும்.

 இவ்வாறு தேர்ந்தெடுத்த பின் எந்த ஒழுங்கில் அவற்றைக் கட்டுரையில் பயன்படுத்த வேண்டும் என்பதைத் தீர்மானிக்க 'வேண்டும். அவ்விதம் தீர்மானித்தபின் தகவல்களை ஒழுங்குமுறையில், கட்டுரையின் தன்மைக்கேற்பப் பயன்படுத்திக் கொள்ளவும்.முன்னுரையை நன்றாக அமைத்துக் கொண்டு, பொருளுரையில் கூறப்போகும் கருத்துக்களை எதை முதலில் தொடங்குவது எதை இறுதியில் முடிப்பது என வரிசைப்படுத்திக் கொள்ளுதல் வேண்டும்.

பொருளுரைப் பகுதியில் கருத்துக்களைச் சிறுசிறு பத்திகளாகப் பிரித்தும் வேண்டுமெனில் துணைத்தலைப்புக்கள் அமைத்தும் எழுதுதல் வேண்டும்.
ஒவ்வொரு பத்தியிலும் முதல் வரியில் சிறிது இடம் விட்டு பத்தியின் தொடக்கம் அமையுமாறு எழுதுதல் வேண்டும். வரியின் தொடக்கத்தில் ஒற்றெழுத்தோ, தனி எழுத்தோ வருதல் கூடா. கை எழுத்து அழகாக இருத்தல் வேண்டும்.

கட்டுரையின் பொருளுக்கேற்ப மேற்கோள்கள், பழமொழிகள், உவமைத் தொடர்கள், சான்றோரின் பொன்மொழிகள் ஆகியவற்றைக் கட்டுரையில் அமைத்துக் கட்டுரையைச் அழகாகவும் மாற்றுதல் வேண்டும்.
கட்டுரையினை எழுதும் போது சொற்களை அதிகமாகப் பெருக்காமல் சுருக்கமாகக் கூறி விளக்குதல் வேண்டும்.

விடயங்களைத் தெளிவாக வாசிப்போர் மனதில் பதியும் வகையில் எழுதுதல் வேண்டும். வாசிப்பவருக்குப் பயன் தரும் வகையிலும் மேலும் வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டும் வகையிலும் கட்டுரை அமைதல் வேண்டும்.
கட்டுரையில் எழுத்துப்பிழை, சந்திப்பிழை, இலக்கணப்பிழை இல்லாமல் எழுதுதல் வேண்டும். மொழிநடை எளிதாகவும் எல்லோர்க்கும் விளங்கும் வகையிலும் எழுதுதல் வேண்டும். ஒரு சொல்லுக்கும் அடுத்த சொல்லுக்கும் இடையில் போதுமான இடம் விட்டு எழுதுதல் வேண்டும். கட்டுரை எழுதி முடித்தபின் பிழைகள் இல்லாமல் இருக்கிறதா? என்று கவனிக்க வேண்டும். இருப்பின் உடன் நீக்குதல் வேண்டும்.

மேற்கூறிய விதிகளை மனதிற் கொண்டு கட்டுரை எழுதப்படின் அது மிகச் சிறப்பானதாக அமையும்.

தவிர்க்கவேண்டியவை:

கட்டுரை எழுதும்போது மாணவர் தவிர்க்க வேண்டியவை வருமாறு:

மிகைபடக் கூறுதல் : ஒரு விளக்கத்தைக் கூறச் சுற்றி வளைத்து எழுதுதல்.
கூறியதுகூறல் : முன் சொன்ன விடயங்களைத் திரும்பத் திரும்பச் சொல்லுதல்
முன்னுக்குப் பின் முரணாகக் கூறுதல்.
பொருள் தெளிவில்லாமல் எழுதுதல்.
பயனற்ற சொற்களைப் பயன்படுத்துதல்.




கருத்துரையிடுக

Post a Comment (0)

புதியது பழையவை